×

வேளாண் சந்தை செயலாளரை செருப்பால் அடித்த விவகாரம்; தூக்கு மேடை ஏற தயாராக இருக்கிறேன்: போலீஸ் விசாரணைக்கு பின் சோனாலி கண்ணீர்

சண்டிகர்: வேளாண் சந்தை செயலாளரை செருப்பால் அடித்த விவகாரம் தொடர்பாக டிக்டாக் பிரபலமும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான சோனாலி போகட் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர், தூக்கு மேடை ஏற தயாராக இருக்கிறேன் என்று, கண்ணீருடன் பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டார். டிக்டாக் பிரபலமும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான சோனாலி போகட் கடந்தாண்டு அரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் விவசாயச் சந்தைக்கு சென்று விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக, வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் செயலாளர் சுல்தான் சிங்கை சந்தித்தார்.

அங்கு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் திடீரென அவரை தனது செருப்பால் அடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. சோனாலி போகட் செயலை பலரும் கண்டித்தனர். இந்நிலையில் சதர் காவல் நிலைய போலீசார், சோனாலி போகட் மீது வழக்குபதிவு செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக சோனாலியை காவல் நிலையம் வரவழைத்து இரண்டரை மணி நேரம் போலீசார் விசாரித்தனர். அவர், தான் செய்த செயலை நியாயப்படுத்தி கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் தனது பேஸ் புக் பதிவில் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஐந்து நிமிட வீடியோவில், சோனாலி உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

பாதிப்புக்கு ஆளான சுல்தான் சிங்கிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். சம்பவம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பெண்கள் காவல் நிலையத்தில் விசாரணை முடிந்த பின்னர், சோனாலி பேஸ் புக் வீடியோ பதிவில், ‘விவசாயிகளின் குரலாக அந்த நிர்வாகியிடம் பேசும்போது, அவர் என்னிடம் தகாத வார்த்தை பேசினார். ஒரு பெண்ணை அவமதிக்கும் போது என்ன செய்ய வேண்டுமோ, அதைத் தான் செய்தேன். நான் தவறு செய்திருந்தால் சட்டம் என்னை தண்டிக்கட்டும். அந்த தண்டனையை ஏற்கிறேன்.

இதற்காக நான் தூக்கிலிடப்பட்டாலும், தூக்கு மேடை ஏற தயாராக இருக்கிறேன். என் கணவர் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். இன்று நான் குரல் எழுப்பவில்லை என்றால், என் மகளுக்கும் எனக்கு ஏற்பட்ட நிலை ஏற்பட்டிருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : affair ,Sonali ,police investigation , Agriculture Market Secretary, Police Investigation, Sonali Tears
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட...